Wednesday, August 19, 2009

THE FAR SPENT DAY

அண்மையில் அழகான என்பதை விட தெளிவான பாசாங்கற்ற நீண்ட சிறுகதை போன்ற நாவலை வாசிக்கும் சந்தர்ப்பம் கிட்டியது. வாசிப்பது ஒன்றும் புதுமையான விடயமல்ல என்றாலும் கிட்டத்தட்ட 3 ஆண்டுகளுக்கு பின் தொடர்ச்சியாக வாசித்து முடித்தது அடிக்கடி கிட்டாத ஒரு அனுபவம். நடுவில் எவ்வளவோ நல்ல புத்தகங்கள் வசித்தாலும், சாருவின் ஸீரோ டிகிரி கூட நிறைய பாதிப்புகளை ஏற்படுத்தினாலும் தொடர்ச்சியாக வாசிக்காதது ஏதோ முக்கியமான ஒரு பொருளை தவற விட்ட உணர்வை ஏற்படுத்தியிருந்தது திரும்ப வாசிக்க கையில் எடுத்தாலும் எதோ ஒரு இனம் புரியாத உணர்வு படிக்க விடாமல் தடுக்கின்றது. அந்த ஒரு காரணத்துக்காகவே சாருவின் முதல் நாவலான எக்ஸ்டென்ஸியலிஸமும் ஃபேன்சி பனியனும் என்ற புத்தகத்தை வாங்கி நிறைய நாளாக வாசிக்காமல் வைத்துக்கொண்டிருக்கின்றேன்.

இப்போது சொல்லவந்த புத்தகத்துக்கும் சாருவுக்குமோ இல்லை பின் நவீனத்துவத்துக்குமோ எந்த தொடர்பும் இல்லை. NIHAL DE SILVA என்பவரின் THE FAR SPENT DAY எனும் புத்தகம். ஆரம்பத்திலேயே நான் பெரிதாக நம் நாட்டு எழுத்தாளர்களை படித்ததில்லை அவ்வளவாக தேடி படிக்கும் நாட்டமும் இருந்ததில்லை சின்ன வயதில் தி.ஞானசேகரம் என்பவருடைய அல்சேஷனும் ஒரு பூனைக்குட்டியும் என்ற சிறுகதை தொகுப்பை அந்த பெயருக்காகவே படித்ததாக ஞாபகம். இப்போது கூட அப்புத்தகம் அலுமாரியில் இருப்பதால்தான் எழுத்தாளரின் பெயரையும் சொல்கிறேன். மற்றபடி சுஜாதாவின் போதையிலேயே நாட்களை கழித்து இருக்கின்றேன் எந்த எழுத்தென்றாலும் அதை சுஜாதாவுடன் ஒப்பிட்டு பார்ப்பது என் சிறுவயது வழக்கமாக இருந்தது. அந்த சிறுவயது அனுமானத்துடனேயே இப்போதும் நாட்கள் போய்க்கொண்டிருந்தன THE FAR SPENT DAY வாசிக்கும் வரை, நிஜமாகவே சுஜாதாவின் சமீபகால கதைகளுக்கு ஒப்பான நடையில் எழுதப்பட்ட ஒரு நாவல் இது. ஒரே மூச்சில் படித்து முடித்தவுடன் எனக்கு எழுந்தது ஒரே ஒரு எண்ணம் தான், அடக்கடவுளே இவ்வளவு நாளா மடையனாவே இருந்திருக்கிறோமே என்பதுதான். வழமையாக பஸ்ஸில் போகும் போது நான் படிப்பது கிடையாது, பெண்களை பார்ப்பதற்கே பஸ்ஸில் நேரம் சரியாக இருக்கும் போது புத்தகத்துக்கு எங்கே?? ஆனால் கடைசியாக கொழும்பில் இருந்து வந்த போது தான் புத்தகத்தை படிக்க ஆரம்பிதேன் கிட்டத்தட்ட 40 பக்கங்களை முடித்து விட்டேன். எனது பஸ் வாழ்க்கையில் மிகப்பெரிய சாதனை அது.

எனக்கு இந்த புத்தகம் அறிமுகம் ஆனவிதம் கொஞ்சம் வேடிக்கையானது. ஒரு வாரத்துக்கு முன் நானும் Adrian ம் Kotahena Flags and whistle க்கு குடிக்க சென்றிருந்தோம் வழமையாக கூட்டமாக தான் செல்லுவோம் இம்முறை எவனைக் கேட்டாலும் பிஸி என்கிறான். கூட்டமாக போவதென்றால் எங்காவது cheap ஆன ரெஸ்டாரென்ட் தான் எங்களின் இலக்காக இருக்கும் Flags and Whistle கூட்டம் தாங்காதென்பதில்லை எங்கள் பர்ஸ் தாங்காது Flags and Whistle கொழும்பு துறைமுகத்தை பார்த்து 5வது மாடியிலமைந்த ரெஸ்டாரென்ட். உண்மையிலேயே கூட்டமாக கூத்தடிக்க உதவாத இடம். அன்று இரண்டு பேர் மட்டும் என்பதால் அந்த இடத்தை தெரிவு செய்தோம் அலுவலகத்திலிருந்தும் 5 நிமிட தூரம் என்பதால் 8 மணியளவில் முதல் ரவுண்டும் தொடங்கி விட்டோம். Adrian என்னுடன் அலுவலகத்தில் வேலை பார்ப்பவன் என்னை விட 9 வயது மூத்தவன் அலுவலகத்திலும் senior நிலை என்றாலும் நண்பனைப் போலதான். இருவருக்கும் மூன்று ஒற்றுமைகள் இதில் மூன்றாவது அன்றுதான் தெரிய வந்தது அது புத்தகங்கள் முதல் இரண்டும் குடிப்பதும், பெண்களும். தவறாக நினைக்க வேண்டாம் பெண்களை பற்றி கதைப்பதோடு சரி அவனுக்கு இன்னும் திருமணமே ஆகவில்லை என்றால் பார்த்து கொள்ளுங்கள். புத்தகங்களை பற்றி பேசும் போது தான் மேற் சொன்ன புத்தகத்தை பற்றிய பேசும் வந்தது. Adrianனின் வாசிப்பறிவோடு ஒப்பிட்டால் நானெல்லாம் பூஜ்ஜியம்தான் அவன் பேசினான் நான் கேட்டுக்கொண்டிருந்தேன் என்று தன் சொல்லவேண்டும். நானும் எனக்கு தெரிந்த சுஜாதா நடையெல்லாம் சொல்ல அவனும் இந்த புத்தகத்தை சொல்லி, அப்போ உனக்கு இந்த புத்தகம் பிடிக்கும் நாளை கொண்டு வந்து தருகிறேன் என்றும் சொன்னான், நானும் சுஜாதாவும் NIHAL DE SILVA வுமா இவன் காமெடி பண்ணுகிறான் சரி நாளை பார்ப்போம் என 11 மணிக்கு வெளியே வந்தோம். புத்தகத்தை படித்தவுடனான உணர்வுகளை தன் மேலே பத்தியில் சொல்லி விட்டேனே இனி புத்தகத்தை பற்றி..

பட்டப்படிப்பை முடித்த இரு நண்பர்கள் அவர்களின் பழைய பாடசாலையினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு கேளிக்கை நிகழ்வில் கலந்து கொள்வதுடன் தொடங்குகிறது புத்தகம். நிகழ்வின் முடிவில் ஏற்படும் சிறிய கைகலப்பு அவர்களின் வாழ்க்கையில் எவ்வளவு தூரம் பாதிப்புகளை ஏற்படுதுகிறது என்பதையே புத்தகம் சொல்கிறது. சிம்பிளான இந்த கமர்ஷியல் தமிழ் சினிமா போன்ற இந்த கதையை தனது திகட்டாத நடையின் மூலம், நான் முன்பு சொன்னது போல் கிட்டத்தட்ட சுஜாதா நடையை ஒத்த நடையிலேயே நகர்த்திச் செல்கிறார். கதையில் அவர் சமகால இலங்கையின் சாபங்களை கையாண்டு இருப்பதுதான் ஆச்சர்யம் அதுவும் இலங்கை பத்திரிகையாளர்களுக்கு அரசியல் பலத்தால் நிகழும் பாதிப்புகளையே கதையின் மையக்கருவாக கொண்டு செல்கிறார். அரசியல் பலத்துடன் மோதும் ஒருவன் தனக்கு சொந்தமான சகலதையும் இழந்து தனக்கு உதவுபவர்களையும் இழந்து இறுதியில் தானும் வன்முறையை கையில் எடுக்கும் படியாக அமைக்கபட்ட கதையை வெவ்வேறு கதைக்களங்களில் நகர்த்துகிறார் எழுத்தாளர். கதையின் பிரதான பாத்திரமான Ravi Perera என்பவனுக்கும் Journalist ஆக வரும் Tanya என்பளுக்கும் இடையிலான காதல் போன்ற உணர்வு மிக அழகாக எடுத்து சொல்லப்பட்டிருக்கின்றது. இருவரும் தனியாக இருக்கும் ஒரு இரவில் Ravi Perera அவளை முத்தமிடும் போது அவள் அதற்கு அனுமதித்து விட்டு அவன் எல்லை மீறும் போது அவள் , முத்தம் O.K ஆனால் அதற்கும் மேல் என்றால் நீ நம்மிருவருக்குமான உறவை பற்றி சீரியஸாக இருந்தால் தான் உண்டு என்கிறாள், அவன் அதற்கு உன்னை எனக்கு பிடிக்கும் அவ்வளவுதான் என்கிறான். பிறிதொரு சமயத்தில் அவன் அவளை நெருங்கும் போது அவள் விருப்பமில்லமல் அன்றைக்கு நீ பொய் சொல்லியிருந்தால் உனக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்திருக்கும் என்கிறாள். இந்த வரிகள் அப்படியே இன்றைய இளைய தலைமுறையை வைத்து எழுதப்பட்டிருக்கின்றன. மேலும் Kadu Piyal என்பவன் தனக்கு கீழ் வேலை செய்யும் ஒரு இளம் பிக்பொக்கட் பெண்ணை கொலை செய்தவர்களை பழி வாங்கும் பகுதி KILL BILL படத்தின் 5 நிமிட திரைக்தை போன்ற உணர்வை தருகிறது.

கதை நடை என்னமோ சுஜாதாவை போல் இருந்தாலும் கண்டிப்பாக Nihal De Silva சுஜாதாவை படித்திருக்க வாய்ப்பில்லை அதை விட அவருக்கு தமிழ் வாசிக்கும் அளவிற்க்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. சிங்கள எழுத்தளரான இவர் தனது முதல் நாவலான THE ROAD FROM ELEPHANT PASS எனும் படைப்புக்கு இலங்கையின் சிறந்த ஆங்கில இலக்கியத்துக்கான விருதை 2003 ல் பெற்றவர். THE FAR SPENT DAY இவரின் இரண்டாவது புத்தகம். இவரின் மூன்றாவது புத்தகம் THE GINIRELLA CONSPIRACY. கிட்டத்தட்ட 3 ஆண்டு காலப்பகுதியில் 3 சிறந்த புத்தகங்களை எழுதிய இவர் 2006 மே மாதத்தில் வில்பத்து காட்டில் கண்ணி வெடியில் சிக்கி பலியானார். இவரின் விருது வென்ற புத்தகமான THE ROAD FROM ELEPHANT PASS இன் கதையே இரண்டு பேர் ஆனையிறவில் இருந்து வில்பத்து காட்டினூடாக கொழும்பு வருவதுதான், Wild LIfe ல் மிகவும் ஆர்வமுள்ள இவரை அவர் மிகவும் ரசித்த இடத்தில் தீவிரவாதம் விழுங்கியது தூரதிஷ்டமானதே

No comments:

Post a Comment

 
பூச்சரம்